உண்டு ருசிக்கவில்லை

உண்டு ருசிக்கவில்லை

மனிதனின் முதல் தேவை உணவு தான். உணவு சுவைபட இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் மனிதன் அதிகம் சம்பாதிக்கிறான். முறைகேடுகளிலும் ஈடுபடுகிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சித் தலைவராகவும், ஆன்மீகத் தலைவராகவும் உயர்ந்து நின்ற காலத்தில் அவர்கள் எத்தகைய உணவை உட்கொண்டார்கள் என்பதை முதலில் ஆராய்வோம்.


 மாமன்னர்கள் உண்ட உணவுகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்களால் கூட கண்டதில்லை; சராசரி மனிதன் உண்ணுகின்ற உணவைக் கூட அவர்கள் உண்டதில்லை என்பதற்கு அவர்களின் வரலாற்றில் ஏராளமான சான்றுகள் உள்ளன.
எங்கள் விடுகளில் மூன்று மாதங்கள் அடுப்புப் பற்ற வைக்கப்படாமலே கழிந்திருக்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார். 'என் சிறிய தாயாரே அப்படியானால் உயிர் வாழ எதை உண்பீர்கள்? என்று நான் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) பேரீச்சம் பழமும், தண்ணிரும் தான் எங்கள் உணவாக இருந்தன. சில நேரங்களில் பக்கத்து விட்டைச் சேர்ந்த தோழர்கள் கறந்த பாலை அன்பளிப்பாகத் தருவார்கள். அதை அருந்துவோம் என விடையளித்தார். அறிவிப்பவர் உர்வா நூல் புகாரி 2567, 6459.

நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் தோல் நீக்கப்பட்ட கோதுமையில் தயாரான ரொட்டியைச் சாப்பிட்டதுண்டா? என்று நபிகள் நாயகத்தின் பணியாளர்களில் ஒருவரான ஸஹல் பின் ஸஅத் (ரலி) இடம் கேட்டேன். அதற்கு அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவன் தனது தூதராக அனுப்பியது முதல் அவர்கள் மரணிக்கும் வரை சக்கப்பட்ட மாவில் தயாரான ரொட்டியைச் சாப்பிட்டதேயில்லை என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் உங்களிடம் சல்லடைகள் இருந்தனவா? என்று கேட்டேன். அதற்கவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் தனது தூதராக அனுப்பியது முதல் அவர்கள் சல்லடையைப் பார்த்ததில்லை என்றார். தோல் நீக்கப்படாத கோதுமை மாவைச் சக்காமல் எப்படிச் சாப்பிடுவிர்கள்? என்று நான் கேட்டேன். அதற்கவர் தீட்டப்படாத கோதுமையைத் திருகையில் அரைப்போம். பின்னர் வாயால் அதை ஊதுவோம். உமிகள் பறந்து விடும். எஞ்சியதைத் தண்ணிரில் குழைத்துச் சாப்பிடுவோம் என்று விடையளித்தார். அறிவிப்பவர் அபூ ஹாஸிம் நூல் புகாரி 5413

நபிகள் நாயகத்தின் குடும்பத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை மூன்று நாட்கள் தொடர்ந்து எந்த உணவையும் வயிறார உண்டதில்லை என நபிகள் நாயகத்தின் நெருங்கிய தோழர் அபூ ஹுரைரா (ரலி) கூறுகிறார். நூல் புகாரி 5374 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தது முதல் அவர்கள் மரணிக்கும் வரை அவர்களது குடும்பத்தினராகிய நாங்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் வயிறார உண்டதில்லை என நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) கூறுகிறார். நூல் புகாரி 5416, 64.54.

ஹஜ் பெருநாள் பண்டிகையின்போது கறி குழம்பில் மீதமாகக் கிடக்கும் ஆட்டுக் காலை பதினைந்து நாட்களுக்குப் பிறகு (நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிடுவதற்காக எடுத்து வைப்போம். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிடுவார்கள் என்று நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார். இதற்கு என்ன அவசியம் நேர்ந்தது? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர் சிரித்து விட்டு குழம்புடன் கூடிய ரொட்டியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினராகிய நாங்கள் மூன்று நாட்கள் வயிறார உண்டதில்லையே என விளக்கமளித்தார். நூல் புகாரி 5423

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பத்தாண்டுகள் பணியாளராக இருந்த அனஸ் (ரலி) இடம் நாங்கள் சென்றோம். ரொட்டி தயாரிப்பவர் ரொட்டி தயாரித்துக் கொண்டிருந்தார். எங்களை நோக்கி சாப்பிடுங்கள் என்று அனஸ் (ரலி) கூறி விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிருதுவான ரொட்டியைச் சாப்பிட்டதில்லை. தமது கண்களால் எண்ணெய்யில் பொறிக்கப்பட்ட ஆட்டைப் பார்த்ததில்லை எனக் கூறினார். அறிவிப்பவர் கதாதா நூல் புகாரி 5335, 5421,
 64.57

 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பசியோடு இருந்ததை அறிந்து) எனது விட்டிருந்து கோதுமை ரொட்டியையும், வாசனை கெட்ட கொழுப்பையும் கொண்டு சென்றேன். அவர்களின் விட்டில் ஒரு சந்தர்ப்பத்திலும் ஒரு மரக்கால் கோதுமையோ, அல்லது வேறு ஏதேனும் தானியமோ இருந்ததில்லை என்று நபிகள் நாயகத்தின் பணியாளர் அனஸ் (ரலி) கூறுகிறார். நூல் புகாரி 2069, 2508

நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் பள்ளிவாசல்  வயிறு ஒட்டிய நிலையில் படுத்திருந்ததை நான் பார்த்தேன். உடனே என் தாயார் உம்மு சுலைம் (ரலி) இடம் வந்து இதைக் கூறினேன். அதற்கவர் என்னிடம் ஒரே ஒரு ரொட்டித் துண்டும், சில பேரீச்சம் பழங்களும் தான் உள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும் வருவார்களானால் அவர்களின் வயிறு நிரம்பும். யாரையேனும் உடன் அழைத்து வந்து விட்டால் அவர்களுக்குப் போதாமல் போய் விடும் என்றார் என நபிகள் நாயகத்தின் பணியாளர் அனஸ் (ரலி) அறிவிக்கிறார். நூல் முஸ்லிம் 3802

 நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நெருங்கிய தோழராக இருந்த அபூ ஹுரைரா (ரலி) ஒரு கூட்டத்தினரைக் கடந்து சென்றார். அவர்கள் முன்னே பொறிக்கப்பட்ட ஆடு வைக்கப்பட்டிருந்தது. அவர்கள் அபூ ஹுரைராவையும் சாப்பிட அழைத்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தீட்டப்படாத கோதுமை ரொட்டியையே வயிறார சாப்பிடாத போது நான் இதைச் சாப்பிட மாட்டேன் என அபூ ஹுரைரா (ரலி) மறுத்து விட்டார். நூல் புகாரி 5414

 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தினரிடம் குழம்பு ஏதும் உள்ளதா? எனக் கேட்டனர். வினிகரைத் தவிர வேறு ஏதும் எங்களிடம் இல்லை என்று குடும்பத்தினர் கூறினார்கள். அதைக் கொண்டு வரச் செய்து அதைத் தொட்டுக் கொண்டு சாப்பிட்டார்கள். 'வினிகர் சிறந்த குழம்பாக இருக்கிறதே என இரு முறை கூறினார்கள். நூல் முஸ்லிம் 3824

இந்த வரலாற்றுச் சான்றுகளைப் பல கோணங்களில் நாம் அலசிப் பார்க்க வேண்டும். ஏழ்மையிலேயே காலத்தைக் கழிக்கும் ஒருவர் மிகவும் எளிமையான உணவை உட்கொள்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 25 வயது முதல் நாற்பது வயது வரை மிகப் பெரிய செல்வந்தராக இருந்தார்கள். காய்ந்து போன ரொட்டியைச் சாப்பிடும் நிலையில் அவர்கள் இருந்ததில்லை. செல்வச் செழிப்பை ஏற்கனவே அனுபவித்து பழக்கப்படாத, வாய்ப்பும் வசதியும் கிடைக்கப் பெறாத ஒருவர் இத்தகைய உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடித்தால் நாம் ஆச்சரியப்பட முடியாது. ஆனால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலிமை மிக்க ஆட்சித் தலைவராக இருந்தார்கள். அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி எல்லா வசதிகளையும் அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு இருந்தது. அவர்கள் அனுபவித்தால் யாரும் எதிர்க் கேள்வி கூட கேட்க மாட்டார்கள் என்ற நிலையும் இருந்தது. அவர்கள் உருவாக்கிய அரசாங்கக் கருவூலத்தில் ஒரு வேளை பணம் இருந்திருக்காது என்று யாரும் நினைத்து விட வேண்டாம்.


இன்று வரை எந்த அரசாங்கமும் தன்னிறைவு பெற்றதில்லை. (இதைப் பின்னர் நாம் விளக்குவோம்) * அப்படி இருந்தும் தோல் நீக்கப்படாத கோதுமை ரொட்டியைச் சாப்பிட்டு அந்த மாமன்னரால் எப்படி வாழ்க்கை நடத்த முடிந்தது? * குழம்பு கூட இல்லாமல் வினிகரில் தொட்டு அதையும் ருசித்துச் சாப்பிடுவது எப்படி அவர்களுக்குச் சாத்தியமானது? * காய்ந்த ரொட்டியும், வினிகரும் கூட இல்லாமல் வெறும் பேரீச்சம்பழத்தை மட்டும் சாப்பிட்டுக் கொண்டு, பச்சைத் தண்ணிரை மட்டும் குடித்துக் கொண்டு பல மாதங்களை அவர்களால் கழிக்க முடிந்தது எப்படி? * அந்த உணவைக் கூட தினமும் சாப்பிட முடியாத நிலையை எப்படி அவர்களால் சகித்துக் கொள்ள முடிந்தது? * ஒரு நாள் தயாரிக்கப்பட்ட பழைய குழம்பை பதினைந்து நாட்களுக்குப் பிறகு பயன்படுத்துவதற்கு நிகரான வறுமையான வாழ்க்கையை உலக வரலாற்றில் நம்மால் காண முடியுமா? * முதலாளியின் பசியைக் கண்டு அவரிடம் வேலை பார்ப்பவர் பரிதாபப்பட்டு தனது விட்டிருந்து உணவு கொண்டு வந்து கொடுக்கும் நிலையை உலகில் எந்த மன்னரேனும், எந்த முதலாளியேனும் சந்தித்திருக்க முடியுமா? * காய்ந்த ரொட்டியையும், தொட்டுக் கொள்ள வாசனை ஏதும் இல்லாத உருக்கிய கொழுப்பையும் தமது வேலைக்காரர் விட்டிருந்து வாங்கி பசியை நீக்கிய தலைவர் கற்பனைக் கதையில் கூட இருக்க முடியுமா ?

Comments

Popular posts from this blog

ஏன் இந்த எளிய வாழ்க்கை...?

வாழ்க்கைச் செலவுக்கு என்ன செய்தார்கள்?